economics

img

பிரான்சின் வழியில் உருகுவே? மக்கள் பெரும் எழுச்சிப் போராட்டம்!

பிரான்சில் கொண்டு வரப்படும் மக்கள் விரோத ஓய்வூதியத் திட்டத்தைப் போன்று தென் அமெரிக்க நாட்டிலும் கொண்டு வரவுள்ளதால் மக்கள் பெரும் எழுச்சியுடன் போராடத் தொடங்கியுள்ளனர்.

தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில், தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமையைப் பறிக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச வயதை அதிகரிப்பது மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச பணிக்காலத்தையும் உயர்த்துவது என்று இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான பிரான்ஸ் அரசு சட்டம் இயற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்காது என்பதால் தனது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் தங்கள் போராட்டங்களை நடத்தி வருகையில் மேலும் பல நாடுகளிலும் இத்தகைய சட்டங்களை இயற்றுவதற்கான முயற்சிகள் அரசுகள் இறங்கியுள்ளன. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் உலகின் பல நாடுகளில் நடைமுறைக்கு வந்தது. அந்த ஓய்வூதியத் திட்டம் வெற்றி பெறாததால், எத்தகைய சமூக நலப்பயன்களைத் தந்து நிலைமையைச் சமாளிக்கலாம் என்று உலக நாடுகள் ஆலோசித்து வந்தன. புதிய திட்டங்களுக்குத் தனது நிதியுதவி இருக்கும் என்று உலக வங்கியும் தெரிவித்துள்ளது.

சுமார் 40 நாடுகளுக்கு உதவி என்ற பெயரில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில் உலக வங்கி கவனமாக இருக்கிறது. வயதானவர்களுக்கு எத்தகைய சலுகைகள் அளித்தால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொள்ள முடியும் என்று ஆய்வு நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆய்வுகளை நடத்த உலக வங்கி நிதி ஒதுக்கித் தருகிறது. பெரு நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் அரசுகள், சலுகைகள் அளித்தால் தங்கள் நிதி நிலைமை மோசமாகி விடும் என்று ஒரே குரலில் சொல்லி வருகின்றன.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான உருகுவே, பிரான்ஸ்சின் பாதையில் நடைபோட முயல்கிறது. அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் புதிய விதிகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஓய்வு பெறுவதற்கான வயது 60 ஆக உள்ளது. இதை 65 ஆக உயர்த்தும் விதியை முதலில் புதிய திட்டத்தில் சேர்த்தார்கள். கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த வயது வரம்பை 63 என்று மாற்றியுள்ளனர். நாடாளுமன்ற விவாதத்திற்கு அனுப்பப்பட்டுள்ள மசோதாவில் 63 என்று உள்ளது. ஆனால், 60 வயதில் இருந்து உயர்த்தக்கூடாது என்று மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

வேலை நிறுத்தம்

இந்தப் புதிய விதிகளை எதிர்த்து நாடு தழுவிய 24 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. 25 ஆம் தேதியன்று நடந்த வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கண்டனப் பேரணிகளில் பங்கேற்றிருக்கிறார்கள். வயது உயர்வு என்பதைத் திரும்பப் பெற வேண்டும் என்று தொழிற்சங்கம் வலியுறுத்தியிருக்கிறது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தப் புதிய ஓய்வூதியத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத்திட்டத்தை உருகுவேயின் ஜனாதிபதி லூயிஸ் லகல்லே போவ், தனது சாதனைத் திட்டமாக முன்னிறுத்தி வருகிறார். ஆனால், நாங்கள் இதை நடைமுறைப்படுத்த விட மாட்டோம் என்று தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவரான மார்செலோ அப்தலா கூறுகிறார். ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் வெற்றி அவரது கருத்து உண்மை என்பதையே காட்டுவதாகத் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் திட்டம் கைவிடப்படாவிட்டால், கால வரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளும் கட்டாயத்திற்குத் தொழிலாளர்கள் தள்ளப்படுவார்கள் என்றும் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.